யாழ்ப்பாண சமூகக் கட்டமைப்பில் சின்னமேளம் - ஒரு வரலாற்றுப் பாா்வை
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
Faculty of Arts & Culture, South Eastern University of Sri Lanka
Abstract
யாழ்ப்பாணச் சமூகக் கட்டமைப்பில் சின்னமேளம் எனப்படுகின்ற தேவதாசிகளது நடனமென்பது ஏறத்தாழ 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை அப்பகுதிகளில் செல்வாக்குப் பெற்றதொரு நடனமாகவே இருந்து வந்தது. சோழரது ஆட்சிக்காலத்தின் பின்னராக இலங்கையில் தோற்றம் பெற்ற தேவதாசிகள் எனப்படுபவர்களது இத்தகைய நடனமானது 18, 19ஆம் நூற்றாண்டுகளில் மட்டுமன்றி 20ஆம் நூற்றாணடின் நடுப்பகுதிவரை கூட யாழ்ப்பாணத்திலுள்ள பெரும்பாலான சைவ ஆலயங்களில் நடைபெற்ற ஒரு நடன வகையாகக் காணப்பட்டது. அதாவது அக்காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தின் பிரபல்யமான ஆலயங்களாக விளங்கிய சைவ ஆலயங்களில் திருவிழாக்கள் நடைபெறுகின்ற சமயங்களில் இவர்களது நடனமானது திருவிழாக்களின் ஒருபகுதியாக இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது. இத்தகைய இவர்களது நடனத்தினை அக்காலப்பகுதியில் சின்னமேளம் என்ற பெயரினால் பொதுவாக அழைப்பர். அவ்வகையில் அக்கால யாழ்ப்பாண சைவ மக்களது பண்பாட்டில் பிரிக்கமுடியாத ஒரு அம்சமாக இவர்களது நடனமானது காணப்பட்டிருந்தது. (ஈழகேசரி,1936 ஜனவரி 07) மக்கள் பெருமளவில் கூடுகின்ற இடமாக ஆலயங்கள் காணப்பட்டதுடன் பக்திப்பாடல்கள் பாடப்பட்டுப் பலவிதமான விழாக்களும் கொண்டாடப்படுகின்ற இடமாகவும் அது காணப்பட்டது. ஆரம்ப காலங்களில் தமிழ், சமஸ்கிருத சங்கமத்தில் தோன்றி வளர்ந்த நுண்கலை, சிற்பக்கலை போன்றன ஆலயங்களை மையமாகக் கொண்டே வளர்க்கப்பட்டன. ஆலயத் தொடா்பு என்ற இவ்வம்சமானது நுண்கலையோடு தொடர்புடைய ஆலயங்களுக்குத் தம்மை அர்பப்ணித்த தேவதாசிகளுடன் சம்பந்தப்பட்டதாகவும் சோழவரலாற்றின் அரசியல் கலாசாரக் குறியீடாகவும் காலக்கிரமத்தில் வளர்ச்சிகண்டது. (சிவசாமி, வி. 2005) எனவே எல்லோராலும் வெறுக்கப்பட்ட, சமூக ரீதியாக ஒதுக்கப்பட்ட தாசியொருத்தி கலையைத் தொழிலாகக் கொண்டு ஆலயத்துக்குள் நுழைவதைக் குறிக்கும் பதம் தேவதாசிக்குப் பொருத்தமான பதமாகும். இது இவ்வாறிருக்க இந்நடனத்திற்கு எதிராக இத்தகைய நிகழ்வுகள் ஆலயங்களில் நடைபெறுவது தவிர்க்கப்படுதல் வேண்டுமெனவும், இது தமிழ் மக்களது கலாசாரத்திற்கு ஊறினை விளைவிப்பதாகவும் அவ்வப்போது யாழ்ப்பாண சமூகத்திலிருந்த சில முற்போக்கான சிந்தனை உள்ளவர்களினால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. எது எவ்வாறெனினும் பொழுது போக்கு சாதனங்களது அதீத வளர்ச்சியின் பின்னணியில் இந்நடனமானது படிப்படியாகச் செல்வாக்கினை இழந்து வந்து தற்காலத்தில் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டதெனலாம்.
Description
Citation
5th South Eastern University Arts Research Session 2016 on "Research and Development for a Global Knowledge Society". 17 January 2017. South Eastern University of Sri Lanka, Oluvil, Sri Lanka, pp. 27-31.
