ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளில் இனமுரண்பாட்டின் பிரதிபலிப்பு
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
Faculty of Islamic Studies and Arabic Language, South Eastern University of Sri Lanka, University Park, Oluvil.
Abstract
இலங்கையில் சிங்களவர், தமிழர், தமிழ் பேசும் முஸ்லிம்கள் என மூன்று இனங்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வருகின்றனர். சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையில் ஒற்றையாட்சிமுறை தொடர்ந்ததால் பெரும்பான்மையான சிங்களவர்களின் மேலாதிக்கம் ஏற்பட்டது. இதனால் இனமுரண்பாடு வளரத் தொடங்கியது. இலங்கை நாட்டின் தேசிய இனங்கள் தம் அடையாளத்தை நிலைநிறுத்திக் கொள்ள இனம், மொழி, பண்பாடு, சாதி, பொருளாதாரம் முதலிய இன்னோரன்ன விடயங்களுக்காகப் பிணக்குற்றனர். இதனையே இனமுரண்பாடு என்கிறோம். தமிழ் மக்களும் தம் உரிமைகளுக்காகச் சாத்வீக முறையில் போராடினர். 1956 இல் நடந்த தமிழர்களின் சாத்வீகப் போராட்டத்தை எதிர்த்துத் தெற்கில் இனக்கலவரம் ஏற்பட்டது. தொடர்ந்தும் நாட்டில் இனக்கலவரங்கள் ஏற்பட்டன. ஆட்சியாளர்களின் சிங்களக் குடியேற்றங்கள், மொழியுரிமை பறிப்பு, உயர்கல்வியில் தரப்படுத்தல் எனப் பல்வேறு ஒடுக்குமுறைகளால் தமிழர்கள் பாதிக்கப்பட்டனர். முரண்பாடு ஆயுதப் போராட்டமாக மாறியது. அரசபடைகளும், ஆயுதக்குழுக்களும் மோதின. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டனர். வடக்குக் கிழக்குப் பகுதிகளில் அமைதி குன்றலாயிற்று. பல்லாயிரக்கணக்கான தமிழ் பேசும் மக்கள் அகதிகளாயினர். நாட்டை விட்டும் புலம்பெயர்ந்தனர். இப்பிரச்சினைகள் அக்காலச் சூழலில் தோன்றிய ஆக்க இலக்கியங்களில் பிரதிபலித்தன. குறிப்பாக 1980 - 1990 வரையான காலகட்டத்தில் எழுந்த ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளில் அவை தீவிரமாக மேற்கிளம்பின. அக்காலகட்டத்தில் எழுந்த ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளில் இனமுரண்பாடு வெளிப்படுத்தப்பட்ட வகையினையும், இனமுரண்பாட்டிற்கான காரணங்களையும், அக்காலச் சமூக, அரசியல், பொருளாதார நடைமுறைகளிலும், மனித சிந்தனைகள் மற்றும் வாழ்வியல் போக்குகளிலும் இனமுரண்பாடு ஏற்படுத்திய பாதிப்புக்களையும், இனங்களுக்கு இடையிலான பகைமைத்தன்மையாக இனமுரண்பாடுகள் வளர்ந்த விதத்தையும் விளக்குவதே இவ் ஆய்வின் நோக்காகும். இவ்வாய்விற்கு, 1980 - 1990 கள் வரையான காலகட்டத்து இனமுரண்பாடு மற்றும் போர்க்கால வரலாறு பேசும் ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகள் முதன்மை ஆதாரங்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இனமுரண்பாடுசார் அரசியல் - வரலாற்று நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள், ஆய்வேடுகள், கட்டுரைகள் என்பன துணை ஆதாரங்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. விபரண முறையியல் அடிப்படையில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் பகுப்பாய்வு, ஒப்பாய்வு, விளக்கியுரைத்தல் முதலிய அணுகுமுறைகளும் இங்கு பிரயோகிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஈழத்தில் இனமுரண்பாடு வளர்ந்த வரலாற்றையும், அவை 1980 - 1990 வரையான காலகட்ட ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளில் பிரதிபலிக்கப்பட்டிருக்கும் தன்மையையும், போர்ச்சூழலையும், மக்கள் அனுபவித்த துன்பியல் வாழ்வையும், அவற்றினை அனுபவ வெளிப்பாடுகளாய் வெளிப்படுத்தி வாசக மனங்களில் நிலைப்படுத்த கதையாசிரியர்கள் கையாண்ட நுட்பங்களையும் தெரிந்து கொள்ள முடியும்.
Description
Keywords
Citation
Proceedings of the 9th International Symposium - 2022 on “Socio-Economic Development through Arabic and Islamic Studies”. 28th September 2022. South Eastern University of Sri Lanka, University Park, Oluvil, Sri Lanka. pp. 283-300.
